கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் மூலமாக 2022 நவம்பர் 26ஆம் திகதி “இந்திய அரசியலமைப்பு தினம்” அனுஷ்டிக்கப்பட்டது.
1949 நவம்பர் 26ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதை இந்த விசேடதினம் குறித்து நிற்கின்றது.
02. 2022 நவம்பர் 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 200க்கும் அதிகமான சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்தனர். நாகரீக அடிப்படையிலான தமது பங்காளியான இந்தியா தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த கற்பனைநிறைந்த இளம் மாணவர்கள் தெளிவான புரிதலைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா தொடர்பாகவும் இந்திய அரசியலமைப்பு குறித்தும் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘Incredible India’ மற்றும் ‘அடிப்படை கடமைகள்’ போன்ற கருப்பொருட்கள் வழிசமைக்கின்றன. இவ்வாறான போட்டிகளில் அடுத்த தலைமுறையினரது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சிறுவர்களுக்கு ஊக்கமளித்த குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் பாராட்டினார்.
03. சிறுவர்களுக்கு சூழல் பொறுப்புணர்வு மற்றும், எதிர்கால தலைமுறையினர் மீதான அக்கறை ஆகியவை குறித்த உணர்வினை சிறுவர்கள் மத்தியில் தூண்டுவதற்காக கழிவுப் பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த அழகிய கலைப் படைப்புகளை உருவாக்குவது குறித்த பயிற்சி அளிக்கும் பிரத்தியேகமான செயலமர்வும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பை யதார்த்தமாக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் அவற்றின் பின்னணியினை ‘இந்திய அரசியலமைப்பின் உருவாக்கம்’ என்ற கண்காட்சி பிரதிமைப்படுத்தியிருந்தது.
04. இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான அரசியலமைப்பு தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு உயர் ஸ்தானிகர் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தியிருந்தனர். அதற்கு முன்னதாக இந்தியாவை வழி நடத்தும் கொள்கைகளை உருவாக்கும் அரசியலமைப்பின் முன்னுரை உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கையிலுள்ள ஏனைய இந்திய அதிகாரிகளாலும் வாசிக்கப்பட்டது.
05. 1949 நவம்பர் 26ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தினைக் குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் இருக்கும் இந்தியர்களால் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளின் சிறந்த செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு பிரதானமான காரணியாகவும் அடிப்படையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.