தாய்லாந்து புத்தமத கோவிலில் போதைமருந்து சோதனையில் சிக்கி கொண்ட துறவிகள்

பாங்காங்,

தாய்லாந்து நாட்டின் பெத்சாபன் மாகாணத்தில் பங் சாம் பான் என்ற மாவட்டத்தில் புத்த கோவில் ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், கோவிலில் இருந்த தலைமை சாமியார் உள்பட 4 துறவிகளிடம் போதை பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அனைவரும் மெத்தாம்பிடமைன் போதை பொருள் பயன்படுத்தி உள்ளனர் என உறுதியானது. இதனை தொடர்ந்து, கோவிலில் அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள் உள்ளிட்டவற்றை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டனர்.

அவர்களின் புனிதர் அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. இதன்பின்பு, போதை பொருள் மறுவாழ்வு சிகிச்சைக்காக சுகாதார மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவிலில் சாமியார்களே இல்லாத சூழலில், அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் எந்த சடங்குகளையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், சாமியார்களுக்கு அவர்களின் நல்ல செயல்களுக்காக நன்கொடையாக உணவு வழங்குவார்கள். தற்போது, இதனை செய்ய முடியாத சூழல் உள்ளது என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தாய்லாந்து நாட்டுக்கு மியான்மரில் இருந்து லாவோஸ் வழியே போதை பொருள் சப்ளை நடந்து வருகிறது என ஐ.நா. போதை பொருள் மற்றும் குற்ற செயல்களுக்கான அலுவலகம் தெரிவிக்கிறது. இதன்படி அரை டாலருக்கு குறைவான விலையில் தெருவிலேயே போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.