புதுடெல்லி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சனம் செய்த தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஓர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவமதிக்கவும் நினைக்கவில்லை. என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது. நான் அங்கு பேசியது என் கருத்து மட்டுமல்ல. உடன் இருந்த நடுவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிப்பதாகவே நான் பேசினேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் நாட்டின் ஹார்தேஸ் என்ற செய்தித்தாளுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ”நான் என் கருத்தில் இருந்து விலகப்போவதில்லை. ஒரு திரைப்படத்தையும் ஒரு பிரச்சாரம் திரைப்படத்திற்குள் ஒளிந்திருப்பதையும் என்னால் கண்டறிய முடியும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், தன் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, கோவா திரைப்பட விழா நிறைவு விழாவை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லேபிட், “வெறுப்புணர்வைத் தூண்டும் இழிவான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இதுபோன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, இழிவான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவருக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரே கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோரியது. இந்நிலையில் தான் நடாவ் லேபிட் தற்போது தனது நிலைப்பாட்டை விளக்கும் விதத்தில் ஒரு பேட்டி அளித்து இருக்கிறார்.