குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் இன்று தேர்ந்தல் நடந்த நிலையில் அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. காலையில் 100 வயதுடைய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே போன்று மற்றொரு வாக்குச்சாவடியில் திருமணமான ஜோடி ஒன்று மணக்கோலத்தோடு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். வாக்குபதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.