சென்னை திருவொற்றியூர் காமதேவன் நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாதவிடாய் வராததால் சிறுமியின் தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். உடலில் ரத்தம் குறைவாக இருப்பதால் காலதாமதமாக வரும் என மருத்துவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரியதாக தொடங்கியது. எனவே வயிற்றில் கட்டி இருக்கலாம் என நினைத்த சிறுமியின் தாய் சிறுமியை ராஜீவ்காந்தி காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமிக்கு அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட சிறுமியின் தந்தை, தன் மகள் என்று கூட பார்க்காமல் அவளை மிரட்டி, அவளுக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் தந்தை சிவலிங்கத்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.