வாஷிங்டன்: பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூஸா கிராமத்தை சேர்ந்த ராப்பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கு கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் கோல்டி பிரார், லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதால் அவர்கள் சார்ந்த குழுக்கள் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கின் முக்கியத்துவம் கருதி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்துவின் தந்தை பால்கவுர் சிங், உண்மையிலேயே கோல்டி கைது செய்யப்பட்டிருந்தால் அது எனக்கு மிகப் பெரிய நிம்மதி. ஆனால் அரசாங்கம் இந்த கைது குறித்து ஏதாவது உறுதியான ஆதாரத்தை வெளியிடும் வரை இது நம்புவதற்கு இல்லை என்றார்.
முன்னதாக கோல்டி ப்ரார் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு மத்திய அரசு பெரிய பரிசுத் தொகையை அறிவிக்க வேண்டும். 2 கோடி ரூபாய பரிசு அறிவித்தால் தகவல் கிடைக்கும். நான் கூட அந்த பரிசுத் தொகையைத் தருகிறேன் என்று கூறியிருந்தார்.