பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி, பீதர், கார்வார் ஆகியவை மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இதனால் எல்லையோரத்தில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மகாராஷ்டிர அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லிக்கு சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் கர்நாடக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் பெலகாவியில் தனியார் கல்லூரியில் நடந்த கலைநிகழ்ச்சியில் கன்னட கொடிகாட்டிய மாணவர்கள் மீது மராத்திய அமைப்பினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜா தேசாய் ஆகிய இருவரும் கர்நாடகாவில் உள்ள பெலகாவிக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோபமடைந்துள்ள கன்னட அமைப்பினர் மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மகாராஷ்டிர அரசுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘‘இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிர அமைச்சர்கள் அங்குவருவது உகந்ததாக இருக்காது. எனவே மகாராஷ்டிர அமைச்சர்களின் பயணத்தை தவிர்க்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
பெலகாவி, கார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதிகளில் கர்நாடக அரசு போலீஸ் பாது காப்பை அதிகரித்துள்ளது.