குவஹாத்தி, ”முஸ்லிம்களைப் போல் ஹிந்துக்களும், தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் முஸ்லிம்களின் ‘பார்முலா’ வை ஹிந்துக்களும் பின்பற்ற வேண்டும்,” என, அசாமைச் சேர்ந்த எம்.பி., பத்ருதீன் அஜ்மல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தின் பிரபலமான அரசியல்வாதியும், ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் தலைவருமான பத்ருதீன் அஜ்மல் கூறியுள்ளதாவது:
முஸ்லிமில் ஆண்கள், 20 – 22 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை, அரசு அனுமதித்த 18 வயதில் திருமணம் முடிக்கின்றனர்.
அதே நேரத்தில் ஹிந்துக்கள் திருமணத்துக்கு முன்பாகவே, ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவியரை வைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது இல்லை. வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கின்றனர்; பணத்தை சேமிக்கின்றனர்.
பெற்றோர் அழுத்தம் காரணமாக, 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்கின்றனர். 40 வயதுக்கு மேல் இவர்களால் எப்படி குழந்தை பெற முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால் தானே நல்ல அறுவடை செய்ய முடியும்.
எனவே, மக்கள் தொகை விஷயத்தில் முஸ்லிம்கள் பார்முலாவை ஹிந்துக்கள் பின்பற்ற வேண்டும். இளம் வயதில் திருமணம் முடித்தால் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
அவர், ‘லவ் ஜிகாத்’ பற்றி பேசுகிறார். அவரை யாரால் தடுக்க முடியும்? முஸ்லிம் பெண்களை துாக்கிச் செல்லுங்கள். அதை நாங்கள் வரவேற்போம். உங்களுக்கு எவ்வளவு பலம் உள்ளது என்பது தெரிய வரும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்