தலைதூக்குகிறதா பட்டாக்கத்தி கலாசாரம்… அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு  சென்றது. அப்போது காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசலால் பேருந்து நின்றிருக்கிறது.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தினை மடக்கி ஹார்ன் அடித்தால் வழிவிட முடியாதா என கேட்டிருக்கின்றனர். அதற்கு ஓட்டுநர் சரி போங்கப்பா என்று கூறியிருக்கிறார்.

இருந்தாலும் விடாத அந்த மூவர் தகாத முறையில் பேச ஓட்டுநர் உடனே போங்க டா என கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாக்கத்தியை வைத்து ஓட்டுநரை வெட்ட முயன்றனர். அதில் நல்வாய்ப்பாக அவர் தப்பவே பேருந்தின் முன் பக்க கண்ணாடியை தாக்கினர். அரசு பேருந்து கண்ணாடி வளையம் போல் ஓட்டை விழுந்ததைக் கண்டு அவர்கள் எந்த வித பதற்றமுமின்றி அங்கிருந்து செல்ல ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தொமுச நிர்வாகிகள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விவரம் கேட்டு அதன் மூலம் சிவ காஞ்சி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் வந்து ஓட்டுனிடம் நடந்த விவரங்களை கூறி பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த நபர்களிடம் விசாரித்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்வதும், பட்டா கத்தியை கொண்டு ஓட்டுநரை வெட்ட முயல்வது, கண்ணாடியை தாக்கிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காலை‌ வேளையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பூக்கடை சத்திரம் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதும் காலையில் கத்தியுடன் ரவுடிகள் உலா வந்ததும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.