தமிழகத்தில் இருந்து வரும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை சரிவு – ஏ.எஸ்.ராஜன்

கோவை தனியார் கல்லூரியில் மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்வில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்தும், அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து கூறியது; கல்விதுறை, மருத்துவதுறை போல காவல் துறையும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் துறை என தெரிவித்தார். காவல் அதிகாரிகளாக 20 சதவீதம் வரை பெண்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் எனவும், மருத்துவதுறையை போல காவல் துறையிலும் ஏராளமான பெண்கள் வந்து கொண்டு இருக்கின்றனர் என கூறினார்.

ஏ.எஸ்.ராஜன் மாணவியருடனான கலந்துரையாடல்
மேலும், காவல் துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கின்றது. நீதித்துறையின் முதல்கட்டமே காவல் துறைதான், இதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். பெண்களால் காவல் துறையில் சிறப்பாக செயல்பட முடியும் என்றார். தொடர்ந்து பேசியவர், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, அதிகளவு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

தமிழகத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் வருவது குறைந்துள்ளது உண்மைதான். டாக்டராக வேண்டும் வெளிநாடு போக வேண்டும் என்ற எண்ணங்களும் ஒரு காரணம் என தெரிவித்த அவர், ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு முயற்சிப்பவர்களிடம் கலந்துரையாடல் குறைந்து விட்டது, புதுமையான சிந்தனைகள் குறைந்த இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

ஏ.எஸ்.ராஜன் மாணவியருடனான கலந்துரையாடல்

மேலும், கேள்வி முறைகளும் மாறி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களை பற்றி கூட முதலில் தெரியாமல் இருந்தநிலை மாறி இப்போது அப்படி இல்லை உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது புதிய பயிற்சிகள் அளிக்கபடுகின்றன. தொழில் நுட்ப ரீதியாக கையாள்வது, ஊடகங்களை கையாள்வது, கடலோர மாநிலங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சைபர் கிரைம் தொடர்பான பணிகள் ஆகிய புதிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது.

6 பகுதிகளாக மக்களை பிரித்து எந்த மாதிரியான அதிகாரிகளை மக்கள் விரும்புகின்றனர் என ஆய்வு நடத்தப்படுகின்றது. காவல் துறையில் இருந்தவர்கள், 10 ஆண்டு ஐபிஎஸ் பணிபுரிந்த அதிகாரிகள், பொது மக்கள், மீடியா ,நீதித்துறை , என்ஜிஓ என அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டு, அதனடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி முறைகளில் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது.

ஏ.எஸ்.ராஜன் மாணவியருடனான கலந்துரையாடல்
இந்தியா விடுதலை அடைந்ததில் இருந்து இதுவரை 40 ஆயிரம் போலீசார் உயிரிழந்து இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர், மாணவர்கள் , நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதற்காக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது எனவும், சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பது முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும். அதை அறிவை வளர்த்து கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் ஏ.எஸ்.ராஜன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.