வாஷிங்டன்: சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினாலும், வெளிநாடுகளை சேர்ந்த கோவிட் தடுப்பூசிகளை ஏற்க அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மறுப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ் அகூறியுள்ளார். தனது நிலைப்பாட்டை பாதிக்கும் என ஜின்பிங் கருதுவதே அதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.
சீனாவில் நாள்தோறும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து சில தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியாவில் தேசிய பாதுகாப்பு அமைப்பு கூட்டத்தில் அவ்ரில் ஹெய்ன்ஸ் பேசுகையில், கோவிட் வைரஸ் காரணமாக சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தடுப்பூசிகளை பெற்று கொள்ள ஜின்பிங் மறுத்து வருகிறார். மாறாக சீனாவில் தயாரான தடுப்பூசிகளை மட்டுமே அவர் நம்புகிறார். அந்த தடுப்பூசி ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக சரியாக வேலை செய்யவில்லை. இந்த நேரத்தில் சீனாவில் ஆட்சி மாற்றம் அல்லது ஸ்திரதத்ன்மை அல்லது அது போன்ற எதையும் நாங்கள் காணவில்லை. அது ஜின்பிங்கின் நிலைப்பாட்டை பொறுத்தே அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
நிபுணர்கள் கூறுகையில், சீன தடுப்பூசிகளின் தரமானது, வெளிநாடுகளில் தயாரான தடுப்பூசி அளவுக்கு சிறப்பானதாக இல்லை. ஆனாலும், வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இதுவரை அந்நாடு எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை. இதனால், அங்கு தளர்வு அறிவித்தாலும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், சீனா இதுவரை தடுப்பூசி கேட்டு அமெரிக்காவை அணுகவில்லை. வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கும் என தற்போது நாங்கள் கருதவில்லை. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement