வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தி, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் ஜெங்ஜூ நகரில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலையை தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம் அமைத்துள்ளது. ஐபோன் புரோ மாடல்களில் 85 சதவீதம் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மொபைல்போன் அதிகம் தேவைப்படும் நேரத்தில் அந்த தொழிற்சாலையில் கோவிட் தொற்று அதிகரித்தது.
சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அங்கு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாக்ஸ்கான் மன்னிப்பு கோரியது. ஐபோன் 14 புரோ மாடல்கள் ஏற்றுமதி தாமதமாவதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தனது வணிகத்தை ஒரே இடத்தில் வைத்திருப்பதை ஆப்பிள் நிறுவனம் விரும்பவில்லை. சீனாவில் இருந்து உற்பத்தியை வேறுநாடுகளுக்கு மாற்ற அந்த நிறுவனம் விரும்புகிறது. தனது உற்பத்தி கூட்டாளிகளிடம், சீனாவிற்கு வெளியே இந்த வேலையை செய்ய முடியுமா என ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளது . இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தயாரிப்பு மையங்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாக்ஸ்கான் தொழில்நுட்ப குழுமத்தை சார்ந்து இருப்பதையும் குறைத்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement