'மன்னராட்சியோ மக்களாட்சியோ… கோயில் மக்களுக்குதான்'- சேகர்பாபுவை பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

“மன்னராட்சியாக இருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி, கோவில் என்பது மக்களுக்கு தான்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோயில்கள் நிர்வாகமே ஏற்கும் என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 216 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, இன்று (டிசம்பர் 4ஆம் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது.

image
திருவான்மையூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் சார்பில் 31 இணையர்களுக்கு திருமண நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுபிரமணியன் செஞ்சி மஸ்தான், த மோ அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

31 திருமண இணையர்களுக்கும் தாலி உட்பட சுமார் 72,000 மதிப்பில் சீர் வரிசை வழங்கப்பட்டன.  வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள், திருமணம் ஆகவில்லை என்கிற சான்றிதழ், அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஒரு மாதத்திற்கு முன் சமர்ப்பித்த இணையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது

திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களும், மணவிழாவில் பங்கேற்கும் உறவினர்கள் சுமார் 500 பேருக்கு நேற்று இரவும் மணநாளான இன்று காலையிலும் சிற்றுண்டியும், திருமணத்துக்குப் பின்னர் பகல் உணவும் வழங்கப்பட்டது.

image
இதன் பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ”இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மனநிறைவை தந்துள்ளது. நேற்று திருப்பூர் சென்று விட்டு, தூங்குவது போல் தூங்கி விட்டு இங்கு வந்துள்ளேன். களைப்போடு வந்த எனக்கு, உங்களை பார்த்தபோது புத்துணர்ச்சி கிடைத்துவிட்டது. இங்குள்ள அமைச்சர்கள் கோபித்து கொள்ளக் கூடாது. முதல்வர் அமைச்சரிடம் வேலை வாங்குவார்கள். ஆனால் சேகர்பாபு முதல்வரையே வேலை வாங்குகிறார். நாட்டிற்கு பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறார். இந்தியா அளவில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.

கொரோனா உச்சத்தில் இருந்த போது, இந்தத் துறையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. 42 கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். 3,200 கோடி கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியார் வழியில் செயல்படும் இந்த அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதெல்லாம் குறிப்பிட்ட சிலரால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் தான் சேற்றை வாரி இருக்கிறார்கள். அண்ணா வழியில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்கிற வழியில் செயல்பட்டு வருகிறோம்.

மன்னராட்சியாக இருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி கோவில் என்பது மக்களுக்கு தான். அதை நடைமுறைப்படுத்த தான் நீதிக்கட்சியின் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை தொடங்கப்பட்டது. தலைவர் கருணாநிதி தான் ஓடாத தேரை ஓட்டினார். கலைஞர் ஆட்சியில் தான் அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.  அமைச்சர் நேரடியாக கோயில்களுக்கு சென்று கள ஆய்வு செய்கிறார். அழுப்பில்லாமல், சலிப்பில்லாமல் செயல்படும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எனது பாராட்டுக்கள். மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருகிறது.

வெற்றி என்கிற செய்தி வந்தவுடன் ‘வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் இந்த ஆட்சி அமையும்’ என கூறினேன். நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறோம். நீங்கள் பெற்று கொள்ளும் குழந்தைகளை ஒன்றோ, இரண்டோடு நிறுத்தி கொள்ள வேண்டும். நாம் இருவர் நமக்கு மூவர் என்பது போய், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பதே போதும் என்றாகிவிட்டது. குடும்பக் கட்டுப்பாடு என்பது அவசியம்” என்றார் புன்னகைத்தபடி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.