டிச.6 – பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழக முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமானடிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைதீவிரப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி தமிழகத்தில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்கான அறிவுறுத்தல்கள் டிஜிபி அலுவலகத்தில் இருந்துமுறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவற்றை கருத்தில்கொண்டு அந்த 2 மாவட்டங்களிலும் கூடுதல்கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. மேலும், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பெரியமேடு, பாரிமுனை உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் டிச.6-ம் தேதி ரோந்துப்பணியை தீவிரப்படுத்த காவல்ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக துணை ஆணையர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தாம்பரம், ஆவடி போலீஸ் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (டிச.5) இரவு முதல் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை போலீஸார் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர். தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் உள்ளிட்டவற்றில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல, கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள்உட்பட மக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பணியை போலீஸார்இப்போதே தீவிரப்படுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.