சென்னை: மதரஸா பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழகம், பிஹார் தலைமைச் செயலர்கள் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் செயல்படும் மதரஸா பள்ளியில் படித்து வரும் சிறுவர்களை, பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுமத்துக்கு சமீபத்தில் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள் அப்துல், அக்தர், அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் பிஹார் மாநிலத்தை சேர்ந்த, ஆதரவற்ற சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. ‘இந்த சம்பவம் தொடர்பாக தமிழகம், பிஹார் தலைமைச்செயலர்கள், சென்னை காவல்ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.ஆணையப் பிரதிநிதி ரஜீந்தர் குமார் மாலிக், சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்துகொண்டு,ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.