திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை நடைபெறுகிறது.

அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக, 4,500 கிலோ முதல் தரத்தில் தூய நெய் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரத்தில் செப்பினால் உருவான மகா தீப கொப்பரையும் வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்துடன் தயார் நிலையில் கோயிலில் வைத்துள்ளனர்.

அதேபோல், மகா தீபம் ஏற்றுவதற்காக 1,150 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயிலில் வழங்கப்பட்டது. முன்னதாக, மகாதீப திரியை பல்லக்கில் கொண்டுவந்து, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்நிலையில், மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சேர்க்க உள்ளனர். லட்சக் கணக்கில்பக்தர்கள் குவிந்து வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். வடக்கு மண்டல ஐஜி தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில், மாட வீதிகள், கிரிவலப்பாைதயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டண தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு 1 மணி நேரத்தில் முடிந்தது
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை (6ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட்களும், மகா தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் கோயில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு, கோயில் இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்குள், அனுமதிக்கப்பட்ட 1,600 தரிசன டிக்கெட்களும் விற்று தீர்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.