வங்கக்கடலில் டிசம்பர் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதலே மழை பெய்ய தொடங்கியது. இந்தச் சூழலில் வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்ற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
இது நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று பின்னர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
அதேசமயம், வறண்ட காற்றின் தாக்கத்தால், கரையை நெருங்கி வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகர்க்கூடும் என்பதால் வரும் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் 8,9 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறினால் இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.
பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8-ம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலைபெறும்.குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி (இன்று) தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவித்திருந்தது.