காலத்தின் மாற்றத்தால் எல்லாமே இயந்திரமயம் மக்கள் மறந்துபோன மரத்தாலான மாட்டு வண்டிகள்-சமூக ஆர்வலர்கள் வேதனை

திருச்சி : மனிதனின் நாகரீக வளரச்சியில் மிக அரிய கண்டுபிடிப்பு என்றால் அது சக்கரம் தான். மரத்தினால் வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை கொண்டு மனிதன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து முயற்சி செய்து முதலில் அந்த சக்கரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு இழு வண்டியை வடிவமைத்து அதை அவனே இழுத்து செல்ல முயற்சித்தான். அதன்பிறகு அந்த வண்டியை இழுப்பதற்கு வலிமையான மிருகங்களை தேர்வு செய்தான். அதில் முதலில் தேர்வு செய்யப்பட்டது, காளை மாடுகள் தான். இந்த மாட்டிற்கு ஏற்ப வண்டியை வடிவமைத்து அதை வண்டியில் பூட்டி பழக்கப்படுத்தி, நாளடைவில் பெருஞ்சுமைகளை சுமந்து செல்லும் யுக்தியை கண்டுபிடித்தான்.

கன்றுகுட்டியில் இருந்தே காளை மாடுகளை அதற்காகவே வளர்த்து அதற்கு பழக்கப்படுத்த கற்றுக்கொண்ட மனிதன், அதை உழவு தொழிலுக்கு பயன்படுத்திக்கொண்டான். கடந்த 100 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வீட்டில் மாடும், அதனுடன் மாட்டு வண்டியும் இருந்தது. அந்த காலத்தில் மாட்டு வண்டி தான் பிரதான போக்குவரத்தாக இருந்தது. இரட்டை மாட்டு வண்டியின் மூலம் நெல் மூட்டைகளை கொண்டு செல்வது, வைக்கோல் ஏற்றி செல்லுதல், ஏர் உழுவுதல், திருமண ஊர்வலம், என்று மாட்டு வண்டிகளின் பங்களிப்பு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். இதில் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என்று இரண்டு வகை உண்டு.

அதற்கு காரணம் மாட்டு வண்டிகள் மிக வலிமை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது. தச்சர்கள் மாட்டு வண்டி செய்யும் கலையை அறிந்திருந்ததால், மாட்டு வண்டி செய்வதற்கென்றே உறுதியாக மரங்களை பயன்படுத்தினார்கள்.சக்கரத்தில் பயன்படுத்தப்படும் வட்ட வடிவமான விளிம்பு பகுதிக்கு வட்டை என்று பெயர். அந்த வட்டையை தேக்கு மரத்தில் செய்தனர். எனவே வண்டியும் மிக உறுதியாகவும், எவ்வளவு பழு வேண்டுமானாலும் ஏற்றலாம் என்ற அளவிற்கு இருந்தது.

அதேபோல் வட்டையில் இருந்து சக்கரத்தின் மையத்தில் உள்ள பகுதி குடம் என்றும், அதில் இருந்து பிரிந்து செல்லும் கட்டைகள் ஆரக்கால்கள் எனப்படும். குடக்கட்டையில் துளையிடப்பட்டிருக்கும், அதற்கு இடையில் இருசுக்கட்டை தான் இணைப்பாக பயன்படும்.

இக்கட்டை உறுதியாகவும் இருக்க வேண்டும். எடை குறைவாகவும் இருக்க வேண்டும். குடத்துளையில் அச்சாணி பொருத்தப்பட்டிருக்கும். இந்த அச்சாணி மட்டுமே அன்று இரும்பு பொருளாக அந்த மாட்டு வண்டியில் இடம்பெற்றிருக்கும். அந்த மாட்டு வண்டிகளை பார்ப்பதே மிக அரிதானதாக மாறிவிட்டது.

ஆனால் இன்று காலமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளில் பொருட்கள் கீழே விழாமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு மட்டும் தான், மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. மற்ற எல்லா பாகங்களும் இரும்புகளால் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் மோட்டார் பொருத்திய இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இன்று அந்த இரும்பினால் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளும் பயன்படுத்த முடியாமல் சாலை ஓரங்களில் தூக்கி வீசப்பட்டுள்ளது. இன்று மாட்டு வண்டிகள் பெரும்பாலும் மணல் அள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உழவு ஓட்டுவதற்கு டிராக்டர், அரிசி மூட்டைகளை ஏற்றிசெல்ல லாரி, வேன், கல்யாணத்திற்கு கார், ஊர் திருவிழாவிற்கு கார் என்று அனைத்தும் இயந்திர மயமாகிவிட்டது.

மனிதனுடைய நாகரீக வளர்ச்சியில் அவனுடைய பொருளாதாரத்தை உயர்த்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் இன்று காணாமல் போய்விட்டது. இன்று மனிதன் பயன்படுத்தம் இயந்திர வாகனங்களை பராமரிப்பது போன்ற பராமரிப்பு தேவையில்லை. மாட்டு வண்டியின் சக்கரம் மிக இலகுவாக சுற்றுவதற்கு வண்டி மை காய்ச்சுவார்கள்.

அன்று ஒரு மிகப்பெரிய போக்குவரத்து வண்டியாக திகழ்ந்த மாட்டு வண்டிக்கு அள்ளைப்படல், கடையாணி, வட்டை, அச்சு, ஆரக்கால், குடம், பட்டை, இருசு, பாரச்சட்டம், நுகத்தடி, ஏர்க்கால், பூட்டாங்கயிறு என்று 12 பொருட்கள் இருந்தால் போதும். ஆனால் இன்று எத்தனை ஆயிரம் பொருட்களை கொண்டு ஒரு மோட்டார் வாகனம் பொறுத்தப்படுகிறது என்று நாம் சிந்தித்து பார்ப்போம். அழிந்தது மாட்டு வண்டிகள் மட்டுமல்ல, நம்முடைய பாரம்பரிய அடையாளமும் தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.