பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருப்போம். ஆனால் தங்கத்தை அளிக்கும் ஏடிஎம் – களை பார்த்திருக்கிறீர்களா?.. நாட்டிலேயே முதன்முறையாகத் தங்கத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த கோல்ட்சிக்கா (Goldsikka) என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
Goldsikka நிறுவனம் Opencube Technologies என்ற தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் நாட்டின் முதல் தங்கம் வாங்கும் இயந்திரத்தை அமைத்துள்ளது. இந்த இயந்திரம் நாட்டின் முதல் தங்கம் வாங்கும் இயந்திரம் ஆகும்.

அசோகா ரகுபதி சேம்பர்ஸில் (Ashoka Raghupati Chambers) இந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கடைகளுக்கெல்லாம் இனி சுற்றித் திரிய வேண்டிய அவசியமில்லை, நேராக வந்து இந்த ஏடிஎம் – ல் இருந்தே தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஏடிஎம்மில் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கம் வாங்கலாம். ஒருவர் வாங்கும் தங்கத்தின் விலையை ஏடிஎம் திரையிலேயே தெரிந்துக்கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தங்க விலை குறித்து குழப்பம் ஏற்படாது. மேலும் ஏடிஎம்மில் இருந்து தங்க நாணயங்கள் வெளிவரும்போது 999 தூய்மை சான்றிதழோடு பேக் (Pack) செய்து வரும்.
இது குறித்து இந்நிறுவனத்தின் சி.இ.ஓ தரூஜ் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் தங்களின் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தித் தங்க நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தங்க நாணயங்கள் 99.99 சதவிகிதம் தூய்மையானவை. வாடிக்கையாளர்களின் பணத்திற்கான முழு மதிப்பைத் தங்க நாணயங்கள் வழங்கும்.
நுகர்வோரின் உளவியலின் அடிப்படையில், தங்க ஏடிஎம்களின் தேவை குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அதிகப்படியானோர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் சிறிய அளவில் தங்கத்தை வாங்க, பெரிய கடைகளுக்குச் செல்வதில் தடைகள் இருக்கிறது. எனவே இந்த ஏடிஎம் எளிமையான தீர்வாக இருக்கும்.

அதோடு இந்த ஏடிஎம் 0.5 கிராம், 1 கிராம், 2 கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம், 50 கிராம் முதல் 100 கிராம் வரை தங்க நாணயங்களை விநியோகிக்கும். இந்த தங்க நாணயங்களின் மதிப்பு நிகழ்கால சந்தையின் மதிப்போடு இணைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தங்கத்தை வாங்க முயற்சிக்கையில், அந்த நாணயத்தின் மதிப்பு தற்போது இருக்கும் சந்தையின் மதிப்போடு திரையில் தெரியும்.
அடுத்ததாக, ஐதராபாத்தில் உள்ள விமான நிலையம், கரீம்நகர், வாரங்கல் ஆகிய மூன்று இடங்களில் தங்க ஏடிஎம் நிறுவ உள்ளோம். மேலும் இந்தியா முழுவதும் இன்னும் இரண்டு வருடங்களில் 3,000 தங்க ஏடிஎம்கள் நிறுவ திட்டம் வைத்து உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரம் மார்க்கெட்டில் ஒரு கேம் – சேஞ்சராக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நம்ம தமிழ்நாட்டுக்கு தங்க ஏடிஎம் வந்தால் உங்க ரியாகக்சன் என்னவாக இருக்கும் மக்களே?