கோவை மாவட்டம் பத்திரிகையாளர் மன்றத்தில் பாஜகவின் விவசாய அணி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ் “கோவை மாவட்டம் அன்னனூரில் 3700 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனையும் மீறி ஜவுளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் தமிழக அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வரும் டிசம்பர் 7ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னனூர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது தான் குளங்கள் நிரம்பியுள்ளன. விவசாயத்திற்காக அன்னனூர் பகுதி விவசாயிகள் தயாராகும் வேலையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். எனவே தமிழக அரசை கண்டித்து வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.