ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க குழு: ராமதாஸ் வலியுறுத்தல்

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் வலியுறுத்திஐஐஉள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடியின் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14% குறைவாகவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூக நீதிக்கான குரல்கள் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐஐடி வளாகங்களில் மட்டும் அந்த குரலே நசுக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

சென்னை ஐஐடியில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 பேர் உள்ளனர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40% மட்டும்தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68% மட்டும் தான். பழங்குடியினரின் எண்ணிக்கை மூவர், அதாவது அரை விழுக்காடு தான். பேராசிரியர்கள் பணியிடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்தமுள்ள 308 பணியிடங்களில் ஒன்று மட்டுமே பழங்குடியினருக்கு கிடைத்துள்ளது. இது வெறும் 0.32% தான்.

மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் சென்னை ஐஐடி ஆசிரியர்களில் 160 பேர் பிற்படுத்தப்பட்டவராகவும், 89 பேர் பட்டியலினத்தவராகவும், 45 பேர் பழங்குடி வகுப்பினராகவும் இருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் மூன்றில் ஒரு பங்கும், பட்டியலினத்தவருக்கான உரிமையில் ஆறில் ஒரு பங்கும், பழங்குடியின மக்களுக்கான உரிமையில் பத்தில் ஒரு பங்கும் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. ஆனால், உயர் சாதியினருக்கு மட்டும் எல்லையே இல்லாமல் 86.60% பணிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

ஐஐடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சமூக நீதி குறித்து 30 ஆண்டுகளாக குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஐஐடி நிர்வாகம் மட்டும் கேளாக் காதினராகவே உள்ளது. 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி சென்னை ஐஐடி ஆசிரியர்களில் ஓபிசி பங்கு 9.64%, பட்டியலினத்தவர் பங்கு 2.33%, பழங்குடியினரின் பங்கு 0.43% ஆகவும் இருந்தது. இப்போது அந்த அளவு சற்று அதிகமாகி உள்ளது. இதற்கான காரணம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்தது அல்ல. மாறாக, உயர் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் சற்று அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெற்றதுதான்.

ஐஐடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; ஐஐடி நிர்வாகங்கள், தங்களுக்கென ஓர் அளவுகோலை வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை தகுதியற்றவர்கள் என்று கூறி நிராகரிப்பதும், பின்னர் அந்தப் பணியிடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி தங்களுக்கு விருப்பமானவர்களை நியமித்துக் கொள்வதும் காலம் காலமாக நடைபெறும் அநீதிகள். இந்த அநீதி அகற்றப்படும் வரை ஐஐடிகளில் சமூக நீதியை வளர்க்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை. ஐஐடிகளில் சமூக நீதியை உறுதி செய்ய அங்கு நடைபெறும் பணி நியமனங்களை கண்காணிக்க பிற்படுத்தப்பட்ட, பட்டியலின & பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.