உறுமும் ஸ்டாலின்… பம்மும் தமிழக பாஜக: சுப்ரமணியன் சுவாமி சாடல்!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக கூட்டணியில் பாஜக பயணித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டாலும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டது.

பாஜகவை முதுகில் தூக்கிக் கொண்டு அதிமுக சுமந்தால் தேர்தலில் தோல்வியடையும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தனர். கட்சிக்குள்ளேயே வெளிப்படையாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், தேர்தலில் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக மூத்த தலைவர்களே பாஜக கூட்டணியை விமர்சித்து பேசினர். கூட்டணிக்குள் விரிசல் இருந்தாலும், ஒற்றுமையாக இருப்பதாகவே இரு கட்சியை சேர்ந்த தலைவர்களும் பொது வெளியில் கூறி வருகின்றனர். எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரவே அதிக வாய்ப்புள்ளது.

இந்த சூழலில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதனால், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் என நான்காக அதிமுக பிளவுற்று கிடக்கிறது. அதிமுகவில் நடக்கும் பஞ்சாயத்துகள், பிளவு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தங்களை காட்டிக் கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது.

அதேசமயம், தமிழக பாஜகவுக்குள்ளும் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கி வருவதாகவும், சீனியர்களை மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனை அக்கட்சியினரிடம் பேசும்போது, அவர்களே தெரிவிக்கின்றனர்.

மேலும், சமூக வலைதளங்களில் தனது செயல்பாடுகளை மிகுதியாக காட்டிக் கொண்டு, கட்சியில் தான் அசைக்க முடியாத சக்தியாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சினிமா கலாசாரம் தமிழக பாஜகவை அழித்து விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சாடியுள்ளார். இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் திமுகவுக்கு எதிர்க்கட்சி போல் தெரிகிறது.

உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருக்கிறது. சினிமா கலாசாரம் தமிழக பாஜகவை அழித்து விட்டது.” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.