காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பரிந்துரை குழுவில் தகுதியில்லாத நபர்களை நீக்க வழக்கு: யுஜிசி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கணப்படிப்பு துறைத்தலைவராக பணியாற்றி உள்ளேன். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன். தற்போது உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட கன்வீனராக உள்ளேன். காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், அங்குள்ள துணைவேந்தர், டீன்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய குழு அமைத்துள்ளது.

இக்குழுவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பரிந்துரை குழுவில் உள்ளவர்களில் ஐஏஎஸ் அதிகாரி, ஆடிட்டர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதம். மேலும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முரணானது. இவர்கள் தகுதியான துணைவேந்தரை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. எனவே குழுவில் பேராசிரியர்கள் அல்லாத சிலரை நீக்கி, அந்த இடங்களில் தகுதியான பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்து யுஜிசி, காந்தி கிராம பல்கலைக்கழகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.