ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் வசிப்பவர் தேசாய் முண்டா. இவரின் குடும்பத்தாருக்கும், இவருடைய உறவினர் குடும்பத்தாருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 1-ம் தேதி தேசாய் முண்டா வயலுக்கு சென்ற சமயத்தில் இவரின் மகன் கனு முண்டா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். வயலில் வேலைகளை முடித்துவிட்டு, தேசாய் முண்டா வீட்டுக்கு வந்தபோது, கனு முண்டா வீட்டில் இல்லை என அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், கனு முண்டாவை அவரின் உறவினர் (cousin) சாகர் முண்டா கடத்திச் சென்றதாக கூறியிருக்கிறார்கள். உடனே பல இடங்களில் தேடியும் கனு முண்டா கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து தேசாய் முண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதற்கிடையில், குமாங் கோப்லா காட்டில் தலை இல்லாத ஒரு உடற்பகுதி கிடைத்திருக்கிறது. அது கனு முண்டாவுடையது என காவல்துறை உறுதி படுத்தியதற்கு பிறகு அங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் துல்வா துங்ரி பகுதியில் தலை கிடைத்திருக்கிறது.

காவல் அதிகாரி அமித் குமார் தலைமையிலான காவல்துறைக் குழு, சாகர் முண்டா அவருக்கு துணையாக இருந்த அவரின் மனைவி, மற்றும் அவரின் ஆறு நண்பர்களையும் கைது செய்திருக்கிறது. மேலும் அவர்களிடமிருந்து ஆறு கைத்தொலைபேசிகள், இரண்டு கூர்மையான இரத்தக்கறை படிந்த ஆயுதங்கள், ஒரு கோடாரி மற்றும் ஒரு SUV ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது. தலையை துண்டித்தவுடன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.