“பாஜக மக்களை தரம் பிரித்து நடத்துகிறது" – காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார்

அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு, அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதையும், `சமத்துவ, சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டும். அந்த சமுதாயம் சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது ஒழிய வேண்டும். தீண்டாமை அடியோடு அகற்றப்பட வேண்டும்’ என்பதற்காகத்தான் செலவிட்டார்.

சத்தியமூர்த்தி பவன்

அரசியலமைப்பு சட்டத்தை எழுதுகின்ற வாய்ப்பினை காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியும் அவருக்கு கொடுத்த போது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய பேனா முனையினால் ஒரே வரியில், தீண்டாமை ஒழிக்கவேண்டும் என்று எழுதி சென்றார். இன்று இந்திய ஓரளவுக்கு அந்த அரசியலமைப்பு சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு சமத்துவ நாடாக தலையெடுத்து, காங்கிரஸின் நீண்ட ஆட்சி காலத்தில் மிகப்பெரிய ஒரு பொருளாதார வளர்ச்சியையும் அடைந்தது. சிறப்பான நாடாக இருந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் மக்களை சாதி, மத அடிப்படையில் பிரித்து பார்க்கிற கொள்கைகளைக் கொண்ட பாஜக கட்சி, ஆர்.எஸ்.எஸ்-ன் வழிகாட்டுதலோடு மக்களை தரம் பிரித்து நடத்திக்கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் கொள்கைகளை பின்வழியில் தகர்ப்பதற்காக, கள்ளத் தனமாக, களவாணித் தனமாக அரசியலமைப்பு சாசனத்தைச் சிதைக்க துணித்திருக்கிறார்கள். வெவ்வேறு வடிவிலே அதை செயல்படுத்தி வருகிறார்கள்.

பல சட்டங்களைக் கொண்டு வந்து, அரசியலமைப்பு சாசனம் நீர்த்துப்போகும் அளவுக்குச் செயல்படுகிறார்கள். பாராளுமன்றம் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். இன்று ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பாஜக எல்லா சட்டங்களையும் அரசியல் அமைப்பு சாசனங்களுக்கு அப்பாற்பட்டு இயற்றிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர் படியுங்கள், படியுங்கள் என்று சொன்னார். ஆனால் இந்த கல்வி அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

பாஜக

விவசாய சட்டங்களின் படி சிறு, சிறு விவசாயிகள் தங்களது நிலங்களை எல்லாம் பெரு முதலாளிகளுக்குக் குத்தகைக்கு கொடுத்துவிட்டு வீட்டில் கைகட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும். மக்களுடைய எதிர்ப்பால், அந்த சட்டம் சுக்குநூறாக போனது. பஞ்சாப் மக்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் போராடினார்கள். இதுபோல் ஒவ்வொரு சட்டங்களும் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இயற்றி கொண்டிருக்கிறார்கள். எனவே பாஜக தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.