குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் படத்தை முழுமையாக பார்ப்பது என்பது அரிதுதான். குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் இருள், ஒலி, மற்றும் அங்குள்ள லைட் செட்டப்புகளால் அசௌகரியமடைவதால் அழுகிற சூழலில் பெற்றோர்கள் படத்தை பார்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிடுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி- ஸ்ரீ- நிலா தியேட்டர் வளாகத்தில் அம்மாநில அரசு ‘Crying Room’ என்ற புதிய அறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அந்த `Crying Room’-மில் வைத்து படம் பார்க்க ஏதுவாக இருக்கைகள், தொட்டில்கள், ஜன்னல்கள், சவுண்ட் ப்ரூஃப் போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய கேரள மாநிலத்தின் கலாச்சாத் துறை அமைச்சர் வி.என்.வாசன், “அரசாங்கத்தால் நடத்தப்படும் தியேட்டர்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான முயற்சிதான் இது. கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (KSFDC) மாநிலத்தில் உள்ள மற்ற தியேட்டர்களிலும் இதுபோன்ற பல ‘Crying Room’ வசதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ‘Crying Room’ புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். கேரள அரசின் இந்த முயற்சி இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.