சென்னை: கட்சியில் மகனுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, மற்றும் தான் புறக்கணிக்கப்படுவது ஆகியவற்றால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியில் பதவி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, மறைந்த திமுக எம்.பி.,ஜின்னா தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நாங்க கொண்டு வந்து சேர்த்தவன் எல்லாம் மந்திரியாகிட்டான், எம்.பி. ஆகிட்டான். அதுவேறு விஷயம். எங்களுக்கு காலதாமதமாகத்தான் பதவி வந்தது. காரணம், ஒரே கொடி, ஒரே தலைவர் என்று பொறுமையாக இருந்த காரணத்தினாலும், என்றாவது ஒரு நாள் பதவி வந்தே சேரும் என்பதாலும்தான். எனக்கு 69 வயதில்தான் எம்.பி பதவி கிடைத்தது. ஜின்னாவுக்கு 70 வயதில்தான் எம்.பி. பதவி கிடைத்தது.
இன்று வந்திருக்கும் இளைஞர்கள் எல்லாம், நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம், பதவி கிடைக்கவில்லை, எங்களை எல்லாம் ஒதுக்கிட்டாங்க என்கின்றனர். ஒதுக்குவாங்க; அப்படித்தான் நடக்கும். அதெல்லாம் ஜீரணித்துதான் இந்த கட்சியில் இருக்க வேண்டும். கடைசிவரை திமுகவின் தொண்டன் என்று சொல்வதுதான் பெருமையே தவிர, வேறு பெருமை இல்லை’’ என்று கொந்தளிப்புடன் கூறினார்.
அவரது இந்த பேச்சு, திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியினர் பலரும் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சித்தனர். ஆர்.எஸ்.பாரதி யாருடைய ‘ஸ்லீப்பர் செல்’ என்று கேள்வி எழுப்பியதுடன், அவரை கண்காணிக்க வேண்டும் என்றும் பதிவிட்டனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் இல்ல திருமண விழாவில், ஆர்.எஸ்.பாரதியை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ஸ்டாலின், ‘‘பதவி வரும், போகும், கழகம்தான் நம் அடையாளம், உயிர் மூச்சு, அப்படிப்பட்ட இயக்கத்தை உயிர் மூச்சாகக் கருதி உழைத்ததால்தான் 10 ஆண்டுக்குப் பின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்’’ என்று ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.
பல்வேறு தருணங்களில் ஆர்.எஸ்.பாரதி, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து எதிர்ப்புகளை சம்பாதித்து வந்தாலும், கட்சி குறித்த அவரது பேச்சுக்கு பல்வேறு பின்னணிகள் உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அவரது மகன்களில் ஒருவரான சாய் லட்சுமிகாந்தின் அரசியல்எதிர்காலம் குறித்து அவர் மிகுந்தகவலையில் உள்ளதால் இதுபோன்று பேசியுள்ளதாக திமுக வினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலின்போது மகனுக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அதேபோல், தற்போது கட்சியில்இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மகன்களுக்கு பதவி வழங்கப்பட்டது. ஏற்கெனவே டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் மகன்கள் கட்சிப் பதவியில் உள்ளனர். ஆனால், ஆர்.எஸ்.பாரதியின் மகனுக்கு கட்சிப் பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியடைந்துள்ளார்.
மேலும், துணை பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்த நிலையில், அமைப்புச் செயலாளர் பதவியே மீண்டும் அவருக்குக் கிடைத்தது. மாநிலங்களவை எம்பி பதவியும் கிடைக்கவில்லை. வழக்கறிஞர் அணியில் ஒரு காலத்தில் கோலோச்சியவர் அவர். முந்தைய அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் போட்டதுடன் மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளிலும் அவர் ஆஜராகி வந்தார்.
ஆனால், தற்போது அவருக்குப் பதில், வில்சன் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தான் இருக்கும்போதே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் மகன் நிலை என்னவாகும் என்ற சங்கடத்தில் உள்ளார். இதனாலேயே, கட்சிநிர்வாகிகளின் குறைகளைக் கேட்கவேண்டிய இடத்தில் இருந்தபோதிலும், தன் குறையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அவரை மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி வருகின்றனர்’’ என்றனர்.