பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அங்கு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர். சிறுவன் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், நானக் சவுகான் என்பவர் பண்ணையில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். ஆனால் தண்ணீர் வராததால் அதனை பயன்படுத்தவில்லை.
இதையடுத்து கிணறு மூடிவிட்டோம். ஆனால் சிறுவன் எப்படி மூடியை அகற்றினான் என்பது தெரியவில்லை என சவுகான் போலீசாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.