மாண்டஸ் புயல்… இன்னும் சில மணி நேரங்கள் தான். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளது. அதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தழுவி வந்த ‘மாண்டஸ்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இதன் பொருள் புதையல் பெட்டி ஆகும். நடப்பு டிசம்பரில் உருவாகும் முதல் புயல் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாண்டஸ் புயலால் எந்தெந்த மாநிலங்கள் கனமழையால் பாதிக்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும். அதீத கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும். கடற்பகுதியில் பலமான சூறாவளி காற்று வீசும். கரையோரப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (டிசம்பர் 8) காலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று மாலை முதலே தமிழ்நாடு, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் கடலோரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும். வழக்கமாக டிசம்பரில் உருவாகும் புயல்கள் கரையை கடக்கும் முன்பு வலுவிழந்துவிடும். இதனால் பலத்த சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. மழை மட்டுமே புரட்டி எடுக்கும். இதற்கு விதிவிலக்காக சில புயல்கள் இருக்கின்றன. உதாரணமாக வர்தா புயலை எடுத்துக் கொண்டால் வலுவான நிலையில் கரையை கடந்து சேதம் ஏற்படுத்தியது. அதேபோல் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து தான் சேதங்களை கணிக்க முடியும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் கரையோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவைப்படும் விஷயங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது சென்னையில் இருந்து 770 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
