மதுரை: மதுரை மத்திய சிறையில் 12 அலுவலர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து, துறை டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார். வெளிச்சந்தையில் பொருட்களை விற்றதில், 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கிளம்பியது. இந்த புகார் தொடர்பாக தணிக்கை ஆய்வும் நடந்தது. ஊழல் நடந்ததாக இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், இந்த நடவடிக்கை அதிரடியாக அமைந்துள்லது. ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அலுவலர்கள், தொடர்ந்து மதுரையிலேயே பணிபுரிவதாக எழுந்த சர்ச்சைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக மதுரை சிறையில் நேரில் ஆய்வு செய்த டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி, இது குறித்து விசாரணை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று, 12 அலுவலர்களை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல் புகார் உறுதி செய்யப்படாத நிலையில், சர்ச்சைகளின் எதிரொலியாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை சிறை அலுவலக கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மேலாளர் சித்திரவேல் புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பேக்கிங் பிரிவு கிளார்க் கதிரவன் புதுக்கோட்டைக்கும், உதவியாளர் முத்துலட்சுமி சேலத்திற்கும் இடமாற்றப்பட்டனர். இவர்கள் உட்பட மொத்தம், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் மதுரை மத்திய சிறையில் பணிபுரியும் 12பேர் இடமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் மதுரைச் சிறையில் நடந்ததாக கூறப்படும் நூறு கோடி ரூபாய் ஊழல் புகார் இது. 2016 முதல் 2021ம் ஆண்டு வரை நடைபெற்றதாக கூறப்படும் இந்த ஊழலில் அப்போதைய சிறைக் கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக் கைதிகள் உரிமை அமைப்பின் இயக்குநருமான புகழேந்தி இந்த புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மத்தியச் சிறையில் கைதிகள் தயாரித்தப் பொருட்களை, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலிக் கணக்கு எழுதப்பட்டு ஊழல் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டிருந்தது.