மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் சாலையோரத்தில் பேனர்கள் அமைக்க காரைக்கால் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, மழை மட்டுமல்லாது, கரையை கடக்கும் பகுதிகளை ஒட்டி சூறாவளி காற்றும் வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அதிலும் குறிப்பாக இன்று மாலை முதல் நாளை மாலை வரையில் தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும், நாளை மாலை முதல் நாளை மறுதினம் காலை வரையில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், காரைக்காலில் சாலையோரத்தில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், போர்டுக்கள், விளம்பரக் கம்பங்கள் போன்றவற்றை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.