மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு வைகோ பாராட்டு

டெல்லி: மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நாடாளுமன்றம் நேற்று கூடியது. மாநிலங்கள் அவைத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தங்கரை பாராட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவாதம் நடக்கும் போதெல்லாம், பெரிய கட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கற்களான மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாக்க சிறிய கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இன்று மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிட்டது; சமூக நீதி கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இவற்றிற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? பெரும்பான்மையால் அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துகளை, குறிப்பாக சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையை தகர்க்கக் கூடாது. அது நடந்தால், நாட்டின் எதிர்காலமும், நாட்டின் ஒருங்கிணைப்பும் கேள்விக்குறியாகிவிடும். நீங்கள் ஒரு சட்ட வல்லுநர், அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்ட நிபுணராக எத்தனையோ அரசு துறைகளைகளைக் கையாண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களிடமிருந்து நாங்கள் உரிய நீதியை எதிர்பார்க்கிறோம். இந்த அவையின் தலைவரான உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. இவ்வாறு வைகோ உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.