அமைச்சரவையில் உதயநிதிக்கு எந்தத் துறை?! – திமுக-வுக்குள் கூடும் சலசலப்பு

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்ற பேச்சு எழுந்துகொண்டே இருந்தது. முதல்வரின் மகன் என்பதால் இந்தப் பேச்சு தொடர்ந்துகொண்டிருக்கிறது. மீண்டும் கட்சிமீது வாரிசு அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் இப்போதைக்கு அமைச்சரவைக்குள் இடமில்லை எனச் சொல்லி வந்தாலும், உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அணி நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரைத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். அதற்குத் தூபம் போடும் வகையில் உதயநிதி ஸ்டாலினும் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடக்கும் மாமன்னன் திரைப்படம் தான் கடைசிப் படம் என அறிவித்தார். ஆனால், அதற்கிடையே மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டு மீண்டும் சினிமாவிலேயே தொடரப்போவதாக அறிவித்தார். இப்படி மாறி மாறி உதயநிதி அமைச்சராவது குறித்து தி.மு.க-க்குள்ளேயே பேச்சுகள் எழுவதும் அடங்குவதுமாக இருந்தன. ஆனால், தற்போது டிசம்பர் 12 அல்லது 14ம் தேதி உதயநிதி அமைச்சராவது உறுதி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

உதயநிதி

உதயநிதி அமைச்சராகிறார் என்ற பேச்சு எழுந்ததன் பின்னணி குறித்தும் இந்தமுறை அமைச்சராவாரா அல்லது இதுவும் வழக்கமான பேச்சுதானா… அப்படி அமைச்சர் ஆனால், எந்தத் துறை கொடுக்கப்படும் என விசாரித்தோம்.

“இளைஞரணிச் செயலாளர் உதயநிதி இந்த முறை அமைச்சராவது 100 சதவிகிதம் உறுதி” என எடுத்த எடுப்பிலேயே சொல்லிய அந்த மூத்த அமைச்சர் அடுத்தடுத்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார். “இளைஞரணியின் செயல்பாடுகள், நியமனங்களில் பழையவர்களை நீக்கிவிட்டு இளையவர்களை நியமித்தது என அனைத்து வகையிலும் உதயநிதியின் செயல்பாட்டில் தலைவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. எனவேதான் இப்போதே அமைச்சரவைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என நினைக்கிறார். உதயநிதியை அமைச்சராக்குவதன்மூலம் கட்சிக்குள் இளம் ரத்தம் பாய்ச்ச முடியும். இன்னும் இளைஞர்களைக் கட்சிக்குள் இழுக்க முடியும் என்ற கணக்கும் மேலிடத்தில் இருக்கிறது.

மூன்று விதமான யோசனைகள் இருக்கின்றன. அமைச்சர் மெய்யநாதனிடம் இருக்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை மட்டும் பிரித்து கொடுத்துவிடலாம் என யோசனை இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் துறைக்கு அமைச்சரானால் அந்த வேலைகளை ஆய்வு செய்வதுபோல அனைத்து தொகுதியிலும் கவனம் செலுத்த முடியும் என்ற திட்டம்தான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தன் பின்னணி என்கிறார்கள். அப்படியில்லையென்றால் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையைக் கொடுக்கலாம் என்ற யோசனையும் இருக்கிறது. அமைச்சர்களிடம் இருக்கும் எந்தத் துறையையும் பிரிக்க வேண்டாம் என ஒருவேளை முடிவு செய்தால் முதல்வரிடமிருந்து கீதா ஜீவனிடம் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் துறையை ஒதுக்கலாம் என்ற யோசனை இருக்கிறது. ஆனால், இந்தத் துறை கொடுப்பார்களா என்பது சந்தேகமே.” என்றவர்…

உதயநிதி, ஸ்டாலின்

“உதயநிதியை அமைச்சர் ஆக்குவதற்கான அனைத்துப் பணிகளும் நடந்து வருகின்றன. எனவே, அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவு வந்திருக்கிறது. அடுத்த வாரத்தில் இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கும்.” என முடித்துக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.