பாரீஸ்: “எனது சகோதரரின் செயல்பாடுகளை நான் கண்டிக்கிறேன்” என்று அயத்துல்லா அலி காமெனியின் சகோதரி பத்ரி ஹொசைனி காமெனி தெரிவித்துள்ளார்.
அறநெறி காவலர்களின் தாக்குதலினால் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் தங்கை பிரான்ஸில் வசித்து வருகிறார். தற்போது ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் குறித்து தனது அண்ணனான அயத்துல்லா அலி காமெனியை அவர் விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து பத்ரி ஹொசைனி காமெனி வெளியிட்டுள்ள கடித்தத்தில், “எனது சகோதரரின் நடவடிக்கைகளை நான் எதிர்க்கிறேன் என்று அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமியக் குடியரசின் குற்றங்களுக்காக வருந்துகின்ற அனைத்து தாய்மார்களுக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அலி கமெனியின் புரட்சிகர காவலர்களும், கூலிப்படையினரும் விரைவில் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மக்களுடன் சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் இந்த நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.