புதுடெல்லி: குஜராத், இமாச்சல் மாநில தேர்தல்களை அமைதியாக நடத்திமுடித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னதாக காங்கிரஸ் 1985-ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது. அந்த வரலாற்றை மாற்றியுள்ளது பாஜக.
தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “குஜராத், இமாச்சல் மாநில தேர்தல்களை அமைதியாக நடத்திமுடித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி.
அதேவேளையில், இமாச்சல் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டின் வளர்ச்சி மீது பொதுமக்கள் வைத்துள்ள வலிமையான நம்பிக்கையின் வெளிப்பாடாக குஜராத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. நாட்டிற்கு சவாலான நிலை வரும்போதெல்லாம் மக்கள் பாஜக மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.