ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் இருவர், கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், காதலிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் வந்திருக்கிறது. அதை விமரிசையாகக் கொண்டாட இருவரும் முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி, இருவரும் பிரபலமான உணவகத்தில் சந்திப்பதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், காதலன் குறித்த நேரத்தில் வரவில்லை என்றும், தாமதமாக குடிபோதையில் வந்ததாகவும் கூறப்படுகிறது. தாமதமாக வந்த காதலனிடம், இளம்பெண் காரணம் கேட்டு சண்டையிட்டிருக்கிறார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

கோபமடைந்த காதலன், அந்தப் பெண்ணை அடித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், கைவினைக் கத்தியால் காதலனின் கழுத்தில் குத்தியிருக்கிறார். இதில் ஆழமாக காயம்பட்ட காதலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். சிகிச்சைப் பெற்றுவரும் இளைஞரின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் மீது காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறது.