பல் திறன் அபிவிருத்தி சேவைப் படையணிக்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் 

அரசாங்க சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பல் திறன் அபிவிருத்தி சேவைப் படையணிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 32, 000 பேருக்கு அடுத்த வருடத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களை அரச மற்றும் பொது நிறுவனங்களில் நிலவூம் வெற்றிடங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு இணைப்புச் செய்து நிரந்தரமாக்கி பொருத்தமான சம்பள மட்டங்களில் அமர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரச மற்றும் பொது நிறுவனங்ளில் பல் திறன் அபிவிருத்திக் குழுவினரை இணைப்புச் செய்து நிரந்தரப் பதவியில் அமர்த்திய பின்னர் பல் திறன் விருத்தி சேவைப் படையணி கலைக்கப்படுவதற்கு நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரித்தார். 

“மருத்துவ அறிக்கைகளுக்கு இணங்க இப்பல் திறன் அபிவிருத்தி சேவைப் பணியாளர்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்ட முறைக்கு இம்மாதம் முதல் மாற்றத்தை ஏற்படுத்தி, ஏனையவர்களுக்குப் போன்று வழமையான விடுமுறை இரண்டு நாட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” அவர் குறிப்பிட்டார்.

மூன்று மொழிகளிலும் செய்திப்பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்து பிரதேச செயலக மட்டத்தில் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி, பயிற்சியாளர்களாக 39,091 பேரை உள்வாங்கியதாகவும், பல்வேறு காரணிகளால் சேவை விட்டு விலகிய, மரணமடைந்த மற்றும் சேவையிலிருந்து நீங்கிய நபர்கள் தவிர 2022.12.02ஆம் திகதியில் 32,040 பேர் இச்சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்கள் அரச துறையில் கனிஷ்ட தரப் பதவிகள் 304இல் அவசியமான ஊழியர்களைப் பூர்த்தி செய்வதற்காக 9 துறைகளில் அப்பணியாளர்களை உள்வாங்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

விவாசயம், கால்நடைகள் மற்றும் சுற்றாடல், சுகாதாரப் பிரிவு உதவியாளர் சேவை, சமூக நல சேவை, எரிசக்தி தொழில், பாதுகாப்பு சேவை, அலுவலக உதவியாளர் சேவை, மற்றும் சாரதி சேவை எனும் அரச, பொது நிறுவனங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் செயற்படும் நிறுவனங்களில் காணப்படும் தேவைப்பாடுகளுக்கு இணைப்புச் செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெளிவுபடுத்தினார்.

தற்போது நிலவும் பொருளாதார நிலையில் புதிதாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு உள்வாங்கப்படும் அந்த ஊழியர்கள் அலுவலகங்களில் கழுத்துப்பட்டி, கோட் அணியும் தொழிலாக மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்த அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், இவ்வூழியர்கள் தாம் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் தொழிலின் தன்மையை நன்கு புரிந்து பணியாற்ற வேண்டும் என வலியூறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.