அரிமளம் அருகே பழமைவாய்ந்த செண்பகசாஸ்தா அய்யனார் கோயிலை புனரமைப்பு செய்ய அதிகாரிகள் ஆய்வு

திருமயம் : அரிமளம் அருகே பிரச்சனைக்குரிய பழமை வாய்ந்த கோயிலில் புனரமைப்பு செய்ய அதிகாரிகள் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நம்பூரணிபட்டி கிராமத்தில் பழமைவாய்ந்த செண்பகசாஸ்த அய்யனார் கோயில் உள்ளது. இது அப்பகுதியில் உள்ள கிராமத்தினரிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். தற்போது இக்கோவிலானது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதனிடையே கோயில் கும்பாபிஷேகம் நடந்து நூற்றாண்டுகளை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கோயில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முன்னேற்பாடு செய்தபோது கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு தரப்பினிடையே பிரச்சனை எழும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்னை பல ஆண்டுகளாக தொடரும் நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனிடையே அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று செண்பகசாஸ்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத்துறை அதிகாரிகள் பிரச்னைக்குரிய கோயிலில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு கோயில் புனரமைப்பு செய்வதற்கான மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இதனால் கோயில் திருப்பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு சுற்றுவட்ட கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.