புதுடெல்லி: 50 கோடிக்கும் அதிகமான வாக்காளர் அட்டை விவரங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை விவரங் களுடன் ஆதார் எண்ணை இணைக் கும் பணி நடைபெற்று வருகிறது. நமது நாட்டில் 95 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் அதாவது 50 கோடிக்கும் அதிகமானோர் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பது என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து இதைச் செய்ய வேண்டும்.
ஒரே நபரின் பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தால் அதை நீக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. வாக்குச்சாவடி அளவிலான அதிகாரியின் ஒப்புதல், சரிபார்ப்பு இல்லாமல் யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.
தற்போது ஒரே பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலோ அல்லது ஒரு புகைப்படம் உடைய நபரின் வாக்காள அட்டை வேறு வேறு இடங்களில் இருந்தாலோ அதை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஆதார் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்க்கும் போது, கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறினார்.