சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பசுமை விமான நிலையம் அமைப்பதுக்கு மத்திய, மாநில அரசால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துறை அடுத்துள்ள 4,563 ஏக்கர் நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கிலி பாடி, மாடபுரம், பரந்தூர், கொளத்தூர், நெல்வாய், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் இந்த விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 3,646 ஏக்கர் தனியார் நிலமும், 1,542 ஏக்கர் அரசு நிலமும் அடங்கும். இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதற்கிடையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில், தி.மு.க எம்.பி கே.ஆர்.என் ராஜேஸ்குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி அணில் பிரசாத், மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி இளமாறன் கரீம், ஆகியோர் சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய விமான நிலையம் பற்றியும், விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்ட விவரங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே சிங், “சென்னையில் தற்போதிருக்கும் விமான நிலையத்துக்கு இட நெருக்கடி இருக்கிறது. இதனை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இதன்படி, புதிய விமான நிலையம் ரூ.2,467 கோடிக்கு அமைகிறது. இதன் மூலம் விமான நிலையத் திறன் உயர்த்தப்படும்.

புதிய விமான நிலையத்தை பொறுத்தவரை விமான நிலைய சாத்தியக்கூறு தொடர்பாக ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இரண்டாவது விமான நிலையத்திற்கு சென்னை அருகில் உள்ள பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருக்கிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 2,349 கோடிக்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான நிலையங்கள் பொது, தனியார் கூட்டமை முறையில் ஏலம் விடப்பட்டது” என விளக்கமளித்திருக்கிறார்.