வரவேற்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக நடனமாடினார் திருமணத்துக்கு சில மணிநேரத்துக்கு முன்பு மணமகள் திடீர் தற்கொலை

*மணமகன் டார்ச்சர் செய்ததாக தந்தை புகார்

திருமலை :  தெலங்கானாவில் வரவேற்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக நடனமாடிய மணமகள், திருமணத்திற்கு சில மணிநேரத்துக்கு முன்பு தற்கொலை செய்து ெகாண்டுள்ளார். மணமகன் டார்ச்சர் செய்ததே இதற்கு காரணம் என மணமகளின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.தெலங்கானா மாநிலம்  நிஜாமாபாத் மாவட்டம், நவிபேட்டில் ரவளி(22) என்ற இளம்பெண்னுக்கும், அதேபகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 10ம் தேதி இரவு மெகந்தி உற்சவம்(திருமண வரவேற்பு) நடந்தது. இதில் மணமக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். அப்போது மணமகள் ரவளி சினிமா பாடலுக்கு தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நடனமாடி உள்ளார். பின்னர் மணமகள் அறையில் தூங்க சென்றார்.

திருமணத்திற்கு சில மணிநேரத்துக்கு முன்பு நேற்று முன்தினம் அதிகாலை, மணமகளை தயார்படுத்த உறவினர்கள் அறை கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரவளி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் ரவளியின் தந்தை பிரபாகர், மணமகன் சந்தோஷ் திருமணத்திற்கு முன்பே பலமுறை வேலைக்கு செல்ல வேண்டும். சொத்துகள் எப்போது பிரிக்கப்படும் என கேட்டு டார்ச்சர் செய்ததுதான் தற்கொலைக்கு காரணம் என நவிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மணமகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரவளி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, மணமகன் சந்தோஷிடம் போனில் பேசியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புகுந்த வீட்டிற்கு மகளை அனுப்பும் மகிழ்ச்சியில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.