பயம் காரணமாக காங்., அமளி: அமித்ஷா குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி: சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இது குறித்து உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயத்தால், பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அமளி

அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(டிச.,13) பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லிமென்ட் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

காங்., எம்பி., கேள்வி

இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்ட அறிக்கை: இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பார்லிமென்டில் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்வார் எனக்கூறிய பிறகும் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. தொடர்ந்து கேள்வி நேரத்தின் பட்டியலில் உள்ள 5வது கேள்வியை பார்த்த போது காங்கிரஸ் கட்சியின் பயம் எனக்கு தெரியவந்தது. காங்கிரஸ் எம்.பி., ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கான பதிலை நாங்கள் தயாராக வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் பார்லிமென்ட் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

விதிமீறல்

பார்லிமென்ட் செயல்பட்டிருந்தால், 2005 – 06 மற்றும் 2006 – 07 காலத்தில் ராஜிவ் அறக்கட்டளை, சீன தூதரகத்திடம் இருந்து ரூ1.35 கோடி பணம் பெற்றுள்ளது. இது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கு(எப்சிஆர்ஏ) எதிரானது என்ற பதிலை கூறியிருப்பேன். விதிமீறல் காரணமாக ராஜிவ் அறக்கட்டளையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உறுதி

நரேந்திர மோடி, மத்தியில் ஆட்சியில் உள்ளவரை, இந்தியாவின் ஒரு இஞ்ச் நிலத்தை கூட அன்னியர்கள் ஆக்கிரமிக்க முடியாது என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். அமித்ஷாவின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை பதிலளிக்கவில்லை.

ரத்து

ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்ளார். இந்த அறக்கட்டளை மீதான புகார் தொடர்பாக விசாரணை தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்த அமைச்சர்கள் குழு விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட எப்சிஆர்ஏ லைசென்சை, மத்திய அரசு ரத்து செய்தது.

இந்தியாவிற்கான பதவி தியாகம்

பார்லிமென்ட் வெளியே நிருபர்களை சந்தித்த அமித்ஷா கூறியதாவது: ராஜிவ் அறக்கட்டளையின் எப்சிஆர்ஏ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விகளை தவிர்க்கவே பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. சீனா மீதான நேருவின் காதலால் தான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் பதவி தியாகம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.