பட்டாபிஷேகம்: கலைஞரின் பேரனுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்து பட்டாபிஷேக விழா ஒரு வழியாக நாளை நடைபெற உள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
பட்டாபிஷேகத்துக்கு தடை ஏதும் இல்லாவிட்டாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டு, சொந்த கட்சி சீனியர்களிடையே காணப்படும் முணுமுணுப்புகள், கொத்திக்குதற காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், ஓர் அமைச்சராக அவரின் செயல்பாடுகள்… என உதயநிதிக்கு காத்திருக்கும் சவால்கள் நிறையவே உள்ளன.
நான்கே ஆண்டுகளில் அமைச்சர்
“2018-ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கி, கட்சியின் இளைஞரணி செயலாளராகி, இப்போது நான்கே ஆண்டுகளில் தமிழக அமைச்சராகவும் பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, திமுகவில் மற்ற யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்குமா?” என்றால் நிச்சயம் கிடையாது.
இந்த நிலைமை திமுக-வில் என்றில்லை…
* அண்டை மாநிலமான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் கட்சி வேறுபாடின்றி ‘ஓவர் நைட்டில் ஒபாமா’ ஆகும் அரசியல் வாரிசுகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் பரவலாக இருக்கத்தான் செய்கின்றன.
* அதே சமயம், அப்படி அரசியலுக்கு வரும் ‘வாரிசு தலைவர்கள்’, சொந்த கட்சியிலேயே சீனியர்களைத்தாண்டி கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும், எதிர்க்கட்சிகளை சமாளித்தும், இதுபோன்ற இன்ன பிற பல சவால்களை எதிர்கொண்டு தாக்குப்பிடித்தால் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும்.

காத்திருக்கும் சவால்கள்…
அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கும் பல சவால்கள் காத்திருக்கின்றன. முதல் சவால்… எல்லோரும் முன்வைக்கிற ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டுதான். இந்த ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டை அவர் எதிர்காலத்தில் கட்சியில் பதவி கிடைக்காத சீனியர்களிடமிருந்தே எதிர்கொள்ள நேரிடும்.
அதே சமயம் இப்போதைக்கு பொன்முடி, எ.வ. வேலு உள்ளிட்ட பல சீனியர் அமைச்சர்கள் உதயநிதி அமைச்சராவதை வரவேற்றுள்ளனர்.
கட்சியின் மிக சீனியரான பொதுச் செயலாளர் துரைமுருகனோ, ” கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பான். நாளை உதயநிதியின் அமைச்சரவையிலும் இருப்பான்” எனக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், உதயநிதியை முதல்வர் ரேஞ்சுக்கு உயர்த்தி பேசி இருந்தார்.
ஸ்டாலினுக்கு பின்னர் அல்லது ஸ்டாலின் இருக்கும்போதே கட்சியின் தலைமை உதயநிதியிடம் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், தந்தை வழியில் அவரும் துணை முதல்வர், முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்று மறுத்துவிட முடியாது.
இருப்பினும் உதயநிதி அமைச்சராவதை ஆதரிக்கும் கட்சியின் சீனியர்கள், தங்களது வாரிசுகளையும் அமைச்சராக்க நிர்பந்திக்கும்போதுதான் பிரச்னைகள் விஸ்வரூபமெடுக்கும். ஏற்கெனவே டி.ஆர். பாலு போன்றவர்கள் தங்கள் வாரிசுகளை அமைச்சராக்க ஸ்டாலினை வலியுறுத்தியதாக முன்னரே செய்திகள் அலையடித்தன. எனவே சீனியர்களை சமாதானப்படுத்தக்கூடிய சவால்களும் அவருக்கு காத்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
இது ஒருபுறமிருக்க, திமுக-வை கார்னர் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது உதயநிதிக்கான பட்டாபிஷேகம்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நாட்டுக்கு நல்லதை செய்த ஒருவருக்கு முடிசூட்டு விழா செய்கிறார்களா என்ன? உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா?” என விமர்சித்துள்ளார்
அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” திமுக-வை பொறுத்தவரை கழக குடும்பம் போய், குடும்பமே ஒரு கழகம் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதால் இனிமேல் தி.மு.க-வுடைய ஹெச்.ஆராக (HR) உதயநிதி இருப்பார்” என விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,”உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் ஏதோ அவசரம் தெரிகிறது. உதயநிதி விஷயத்தில் அவசரமாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த அவசரத்துக்கான காரணத்தை காலம் உணர்த்தும்” எனக் கூறி உள்ளார்.
எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள்…
இத்தகைய விமர்சனங்கள் பொதுமக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை மறக்கடிக்கக்கூடிய வகையில், ஒரு அமைச்சராகவும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டியதுள்ளது. தான் பொறுப்பேற்க உள்ள துறையில் அவர் எத்தகைய சாதனைகளைச் செய்தார் என்பதை அவர் வெளியுலகிற்கு காட்ட வேண்டும்.
மேலும் அமைச்சராகி விட்டதால், இனி டெல்லி பாஜக-வின் கவனம் உதயநிதி மீது திரும்பும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் எனத் திட்டமிடும் பாஜக, திமுக-வின் எதிர்கால தலைவராக பார்க்கப்படும் உதயநிதியை ஆரம்பத்திலேயே தட்டிவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.

இன்னொருபுறம் கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பையும் அவர் கவனிக்க வேண்டியதுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணியினருக்கு சீட் வாங்கி கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இது தவிர கட்சியில் மெல்ல மெல்ல தனது ஆதரவு வட்டத்தை உருவாக்கவும், அப்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளையும் உதய நிதி எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
இவையெல்லாவற்றையும் விட இன்னொரு சவால், கூட்டணி கட்சித் தலைவர்களையும் திமுக-வின் முகமாக தன்னை ஏற்க வைக்க வேண்டிய சவால்… என உதயநிதிக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்!
“உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால்…” – இபிஎஸ் காட்டம்

சேலம் ஆத்தூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி, “தி.மு.க ஆட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று கூறிவிட்டு, தற்போது ஸ்டாலின் தன்னுடைய மகனை அமைச்சராக்குவது மட்டும் குடும்ப அரசியல் இல்லையா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அவரது பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
பதவியேற்கும் உதயநிதி… அமைச்சர்களின் துறைகளில் என்னென்ன மாற்றங்கள்?!

திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி, நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதையொட்டி, அமைச்சரவையிலும் சில இலாகா மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிஸ்டு கால் மூலமும் ஆன்லைன் திருட்டு..! உஷார் மக்களே!

ஆன்லைன் ஃபிராடு குறித்து நாம் அப்டேட் ஆகி அலர்ட் ஆவதற்குள், ஆன்லைன் ஃபிராடு அப்டேட் ஆகிவிடுகிறது. தற்போது வரை லிங்குகள், OTP மூலம் ஆன்லைன் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள், லேட்டஸ்ட்டாக மிஸ்டு கால் மூலமும் பணத்தை கொள்ளை அடிக்க தொடங்கிவிட்டார்கள்.
இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
Family Health பாலிசி… எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம்?

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். பொதுவாக, குடும்பத் தலைவர், துணைவர் (கணவர் / மனைவி), மகன், மகள், சார்ந்திருக்கும் தந்தை மற்றும் தாய் ஆகியோர் குடும்பம் எனப்படும். இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி எடுக்கப்படும் மருத்துக் காப்பீடு, குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் (Family Health Insurance Plans) எனப்படும்.
இந்த நிலையில், குடும்ப மருத்துவ பாலிசியை எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும், குடும்ப மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகள் என்னென்ன என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
2023 – புத்தாண்டு எப்படி இருக்கும்? | கே.பி.வித்யாதரன் கணித்துள்ள 12 ராசிபலன்கள்

நிகழும் சுபகிருது வருடம், மார்கழி மாதம் 17-ம் நாள்; ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை தசமி திதி… சமநோக்குடைய அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி – கன்னி லக்னத்தில், சிவம் நாமயோகத்தில், தைத்துலம் நாமகரணத்தில், சித்த யோகத்தில், நேத்திரம் 1, ஜுவன் 1/2 நிறைந்த நன்னாளில், நள்ளிரவு 12 மணிக்கு 2023 புத்தாண்டு பிறக்கிறது…
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த புத்தாண்டு பொதுப்பலன்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தனித்தனி பலன்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
‘அரசியல் என்ட்ரி’ குறித்து பேசிய லெஜண்ட் அருள் சரவணன்!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம், அதன் உரிமையாளர் அருள் சரவணன் மக்களிடம் பரிட்சயமானார். விளம்பரங்களில் வைரலான பிறகு, அவர் ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் விளம்பரம், வெள்ளித்திரை வரிசையில் அடுத்ததாக அரசியல் என்ட்ரி குறித்தும் அவர் மனம் திறந்திருக்கிறார்.
இது குறித்த செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…