ரோஸி ஸ்டார்லிங், ஆஸ்பிரே, சிவப்பு ஷாங்க்… கன்னியாகுமரிக்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மழை அதிகமாக பெய்வதால் நன்னீர் பரப்பு அதிகமாக காணப்படுகிறது. இயற்கையாகவே சீதோஷ்ண நிலை சீராக இருப்பதால் வெளிநாட்டு பறவைகளுக்கான புகலிடமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.

மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும்போது சில பறவை இனங்கள் கூட்டமாக கடல் கடந்து, கண்டங்களை கடந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் பாதுகாப்பான வாழ்விடத்துக்காக வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன.

ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்

அவ்வாறான இடங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. சுசீந்திரம் தேரூர் குளம், வேம்பனூர் குளங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வசித்து வருகின்றன. மணக்குடியில் பழையாறு கடலில் கலக்கும் காயல் பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகளிலும் வெளிநாட்டு பறவைகள் வந்து சில மாதங்கள் தங்கி செல்வது வழக்கம். குமரி மாவட்டத்திற்கு விசா இல்லாத விருந்தாளிகளாக வரும் வெளிநாட்டு பறவைகள் இங்கு ஆரவாரத்துடன் வாழ்கின்றன.

கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளில் பறவைகளுக்கு தேவையான புழுக்கள், பூச்சிகள், நண்டு இனங்கள், வெட்டுக்கிளிகள், சிறிய மீன்கள், நத்தைகள், தவளை, தாவரங்கள் என அனைத்து பறவைகளின் உணவு தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக உணவுகள் ஏராளமாக கிடைக்கின்றன.

இதை கருத்தில் கொண்டே சுசீந்திரம் குளம், தேரூர் குளம், மணக்குடி காயல் பகுதிகளை பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஓகி புயலின் தாக்கத்துக்கு பின், சீதோஷ்ண நிலையும் மாறியது. இது மட்டுமின்றி நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு, குளங்களில் ஆகாய தாமரை வளர்ப்பு, தீ வைத்தல், பறவைகளை வேட்டையாடுதல் போன்றவற்றால் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்தது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் குளிரிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் இரைக்காவும் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து குமரி மாவட்டம் வந்தடைந்திருக்கின்றன பறவைகள். இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் மணக்குடி காயலில் உள்ள மாங்குரோவ் காடுகளில் வந்து தஞ்சம் அடைந்துள்ளன. அதிகாலை மற்றும் அந்தி சாயும் வேளைகளில் இப்பறவைகள் வானில் ஒன்று கூடி கடலில் எழும் அலைகள் போல் மேலும் கீழுமாக அலை, அலையாக நடனமாடும் அழகை அப்பகுதி மக்கள் ஆனந்ததுடன் கண்டு ரசித்து வருகிறார்கள். இது பறவைகள் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணக்குடி வந்துள்ள ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர்கள் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளில் நீர்காகம், முக்குளிப்பான், வெண்கொக்கு, பாம்புதாரா, நத்தைகொத்திநாரை, கூழக்கடா, வர்ணநாரை, இருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு வாத்து, தாமரை இலைக்கோழி, கானங்கோழி, நாமத்தாரா, வெள்ளை ஐபீஸ், கருப்பு ஐபீஸ், ஆற்றுமயில் ஆகிய பறவைகளை எப்போதும் பார்க்க முடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து பல பறவைகள் குமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வருகின்றன. ஆஸ்பிரே, புளோவர், சிவப்பு ஷாங்க், பச்சை ஷாங்க், சாண்ட் பைப்பர், டெர்ன், ஊசிவால் முனை வாத்து, சாதாரண டில், சிறிய டெர்ன், காஸ்பியன் டெர்ன் ஹோவெலர், பிளமிங்கோ ஆகியன வெளிநாடுகளில் இருந்து குமரி நீர்நிலைகளுக்கு படையெடுக்கின்றன.

மரத்தின் மீது ரோஸி ஸ்டார்லிங்

இப்போது வந்துள்ள ரோஸி ஸ்டார்லிங் பறவைகளுள் ஐரோப்பாவில் குளிராக இருப்பதால் தனது இனம் பாதுகாப்பாக வாழ மணக்குடிக்கு மாங்குரோவ் காட்டிற்கு வந்துள்ளது. மாங்குரோவ் காட்டில் தங்கி தங்களுக்கு தேவையான இரைகளை உண்டு வருகின்றன. மணக்குடி, சாமித்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த  வகை பறவையினங்களை அதிகம் காண முடிகிறது.

செப்டம்பரில் இருந்தே இடப்பெயர்ச்சி காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. பறவைகளை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும்” என்றனர். மணக்குடி காயல் வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் பறவைகளின் நலனில் அக்கறை எடுத்து வனத்துறையினர் பறவைகளை கண்காணித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.