வாஷிங்டன், இந்தியாவின் தலைமையில், ‘ஜி – ௨௦’ அமைப்பின் வாயிலாக, உலக அளவிலான பிரச்னைகள், சவால்களை எதிர்கொள்வதற்கு முழு ஆதரவை அளிப்பதாக, ‘ஜி – ௭’ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜி – ௨௦ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
கூட்டறிக்கை
இந்த அமைப்பின் மாநாடு, புதுடில்லியில் அடுத்தாண்டு செப்., ௯ – ௧௦ல் நடக்க உள்ளது.
இதில், ஜி – ௨௦ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜி – ௭ எனப்படும் ஏழு நாடுகள் அடங்கிய அமைப்பின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடந்தது.
இதில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன; ஐரோப்பிய யூனியனும் கணக்கிடப்படாத உறுப்பினராக உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தற்போது உலகளவில் நாம் சந்தித்து வரும் அனைத்து பிரச்னைகளையும், ஒற்றுமையுடன் இணைந்து எதிர்கொள்ள தயாராக உள்ளோம். உலக மக்களுக்கு, நாம் அமைதியான, நீடித்த, வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இந்தப் பணியை, ஜி – ௭ அமைப்பு மற்ற ஆதரவு நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளும்.
பொறுப்பேற்பு
இந்த நேரத்தில், ஜி – ௨௦ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு, பெருந்தொற்று என அனைத்திலும், அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது.
ஜி – ௨௦ அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு, அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்