புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தின், ‘கொலீஜியத்தில்’ ஆறாவது உறுப்பினராக நீதிபதி சஞ்சிவ் கன்னா சேர்க்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து கொலீஜியம் நேற்று ஆய்வு செய்தது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்யும். கொலீஜியத்தின் இந்த பரிந்துரை மீது மத்திய அரசு ஆலோசனை நடத்தி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பும். ஜனாதிபதியே நீதிபதிகளை நியமிப்பார்.
வழக்கமாக தலைமை நீதிபதி மற்றும் அதற்கடுத்த நான்கு மூத்த நீதிபதிகள் என, கொலீஜியத்தில் ஐந்து நீதிபதிகள் இருப்பர். இந்த முறையின்படி, அடுத்த தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஒருவர் கொலீஜியத்தில் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது கொலீஜியத்தில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளான எஸ்.கே. கவுல், எஸ். அப்துல் நசீர், கே.எம். ஜோசப், எம்.ஆர். ஷா ஆகியோருக்கு தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இல்லை. வரும், 2024 நவ., 11 வரை தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் இருப்பார். அவருக்கு முன்பாகவே இவர்கள் ஓய்வு பெற்றுவிடுவர்.
இதையடுத்து கொலீஜியத்தின் ஆறாவது உறுப்பினராக நீதிபதி சஞ்சிவ் கன்னா சேர்க்கப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல் நசீர், வரும், ஜன.,4ல் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, நீதிபதி அஜய் ரஸ்தோகி கொலீஜியம் குழுவில் இடம்பெறுவார். தற்போதைய நிலையில், நீதிபதி கன்னா அடுத்த தலைமை நீதிபதியாகும் தகுதி பெற்றுள்ளார்.
நீதிபதி திபங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை, 28 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், ஆறு இடங்கள் காலியாக உள்ளன.
வரும்,2023ல் ஒன்பது நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளனர். தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஆறு நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் நேற்று ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையில், சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement