அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலை மத்திய பா.ஜ.க அரசு மறைத்து விட்டதாகம், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துக்கூட நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்தியா – சீனா மோதல்:
கடந்த டிசம்பர் 9-ம் தேதியன்று அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதிக்கு அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) தாண்டி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்திருக்கின்றனர். அந்தநேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா சீனா இருதரப்பு ராணுவ வீரர்களும் பலத்த காயமடைந்தனர். பின்னர், இருதரப்பும் அந்தப் பகுதியிலிருந்து பின்வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
இந்த மோதல் விவகாரம் இருதரப்பு தலைமை காமாண்டர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு இரு கமாண்டர்களும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பரம் சமாதானம் தெரிவித்திருக்கின்றனர். அதன்பிறகு, டிசம்பர் 11-ம் தேதி இந்தியா – சீனா அமைதி ஒப்பந்தத்தை பாதுகாக்கும் பொருட்டு இருநாட்டு கமாண்டர்களும் கொடி அணிவகுப்பு கூட்டம் ஒன்றை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டுவந்திருக்கின்றனர்.

குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள்:
ஆனால், இந்த மோதல் சம்பவத்தை பா.ஜ.க அரசு வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும், சீனாவை கண்டிக்கும் வகையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டர் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மத்திய அரசாங்கம் தனது அலைக்கழிக்கும் போக்கை விட்டுவிட்டு, சீனாவின் செயலை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என கடுமையான தொனியில் கண்டனம் தெரிவிக்க வேண்டும்!” எனக் கூறியிருக்கிறது.

அதேபோல, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாகவும், அச்சம் தருவதாகவும் இருக்கிறது. இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டிருக்கும் தகவலை அரசாங்கம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஏன் தெரிவிக்கவில்லை? இந்தச் சம்பவத்தின் விவரங்கள் விபரீதமாக உள்ளன. மோதலுக்கு என்ன காரணம்? துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா அல்லது கல்வான் சம்பவம் போல நடந்ததா? எத்தனை வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்? அவர்களின் நிலை என்ன? சீனாவுக்கு வலுவான எதிர்ப்பு செய்தியை அனுப்பும் வகையில், நாடாளுமன்றம் ஏன் நமது ராணுவ வீரர்களுக்கு பொது ஆதரவை வழங்கக் கூடாது?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
மேலும், “எந்த நேரத்திலும் சீன ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் வாய்ந்தது நமது இந்திய ராணுவம். ஆனால், மோடியின் கீழ் உள்ள பலவீனமான அரசியல் தலைமைதான் சீனாவுக்கு முன்பாக நம் அவமானப்பட வழிவகுத்திருக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் தேவை!” என காட்டமாக விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
இந்த மோதல் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கமளித்திருக்கிறார். அதில், “எல்லைக் கோட்டைத் தாண்டி அங்கிருந்த நிலையை மாற்ற சீன ராணுவத்தினர் முயற்சி செய்தனர். ஆனல், நமது ராணுவத்தினர் சீனாவின் முயற்சியை வலிமையாக எதிர்த்தனர். இந்திய ராணுவத்தினர், சீன ராணுவத்தினருடன் சண்டையிட்டு அவர்களை பின்வாங்க வைத்தனர். இந்த மோதலில் நமது ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை, தீவிரமானக் காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை!” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “இந்திய ராணுவத்தினர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால், சீன ராணுவத்தினர் தங்கள் இடங்களுக்கே திரும்பிச் சென்றனர். மேலும், இந்த விவகாரத்தை சீனாவின் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலும் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர், இந்திய ராணுவ கமாண்டர், சீன ராணுவக் கமாண்டருடன் கொடி சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்தி அமைதியை நிலைநாட்டியிருக்கின்றனர். நமது நாட்டின் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிசெய்ய நமது படையினர் முற்றிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்தத் தயாராக இருக்கின்றனர்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்திருக்கிறார்.