தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களை தனியார் நிலத்தில் வேலை பார்க்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலர் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளுக்கு பொறுப்பாளராக சுப்புலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தாருகாபுரம் பஞ்சாயத்து மெம்பர் முருகலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகிறார்.

பொறுப்பாளர்கள் 3 மாதம் (90 நாட்கள்) மட்டுமே பொறுப்பில் பணி செய்ய வேண்டும். ஆனால் மேற்படி நபர்கள் கடந்த 7 மாத காலமாக பணியில் இருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். இதில் முருகலட்சுமி என்பவரின் தகப்பனார் ராமச்சந்திரன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

சுப்புலட்சுமி மற்றும் முருகலட்சுமி ஆகியோர் இணைந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டு ராமச்சந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது, போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.

எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனயடுத்து நீதிபதிகள், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்ததை மனுதாரர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை.” என கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க உத்தரவிட்டு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.