நெல்லை: நெல்லை-நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் ரேஷன் அரிசி மூடை, மூடையாக சாலையோரம் கொட்டிக் கிடக்கிறது. கடத்தல் கும்பல் சாலையோரம் கொட்டிச் சென்றதா என சந்ததேகம் எழுந்துள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு 20 கிலோ அரிசி மாதம் தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை மொத்தமாக கொள்முதல் செய்வது, அரிசி ஆலைகளுக்கு கொண்டு சென்று பட்டை தீட்டி மீண்டும் பொது மார்க்கெட்டில் விற்பனை செய்வது, அண்டை மாநிலங்களுக்கு லாரிகள், ரயில்களில் கடத்திச்செல்வது என கடத்தல் கும்பல் அவ்வப்போது கை வரிசை காட்டி வருகிறது.
இந்த கடத்தல் கும்பலை வருவாய்த்துறை பறக்கும் படையினர், குடிமைப்பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவ்வப்ேபாது பிடித்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளன. இதையும் மீறி கடத்தல் கும்பல் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை – நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் தியாகராஜநகர் ராஜகோபாலபுரத்தையும் – சிவந்திப்பட்டியையும் இணைக்கும் ரயில்வே பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சாலையோரம் ரேஷன் அரிசி மூடை, மூடையாக கொட்டிக்கிடந்தது. ஒரு சில அரிசி மூடைகள் முழு மூடைகளாகவும், ஒரு சில மூடைகளில் இருந்து ரேஷன் அரிசி சாலையோரத்திலும் கொட்டிக்கிடந்தது.
ஒரு இடத்தில் 25 மூடைகளும், மற்றொரு இடத்தில் 15 மூடைகளும் என மொத்தம் 40 மூடைகள் ரேஷன் அரிசி கொட்டிக் கிடந்தது. யாராவது கடத்தல் கும்பல் வாகனங்களில் இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்திருக்கலாம். போலீசுக்கு பயந்து சாலையோரத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர்.
இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. சாலையோரம் வீசிச்சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரிக்கின்றனர். அந்த வழியாக கடந்து சென்ற வாகனங்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினால் முழு தகவல்களும் தெரியவரும் என நம்பப்படுகிறது.