புதுடில்லி :சீன ‘கம்ப்யூட்டர் ஹேக்கர்’களால் முடக்கப்பட்ட புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ‘சர்வர்’கள் தற்போது மீட்கப்பட்டு, தகவல்கள் பாதுகாப்புடன் இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் உட்பட ஆண்டுக்கு 38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், ‘அப்பாயின்ட்மென்ட்’ ரசீது வழங்குவது, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பரிசோதனை முடிவுகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட அனைத்தும், ‘ஆன்லைன்’ வாயிலாக செய்யப்படுகின்றன.
இந்த தகவல்கள் அனைத்தும், 100 சர்வர்களில் சேமிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 23ல், எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐந்து சர்வர்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து, இணைய பயங்கரவாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின், புதுடில்லி போலீசின் சைபர் பிரிவு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, சர்வர்களையும் அவற்றில் உள்ள தகவல்களையும் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, காங்., – எம்.பி., சசி தரூர், லோக்சபாவில் சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.
நம் சர்வர்களை முடக்கியது யார், அவர்களின் நோக்கம் என்ன, எந்த அளவு பாதிப்பை அது ஏற்படுத்தி உள்ளது என்பது தெளிவற்று இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், ‘எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்களை முடக்கியது சீன ஹேக்கர்கள்; தற்போது அவை மீட்கப்பட்டு, லட்சக்கணக்கான நோயாளிகளின் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கின்றன’ என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement